செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஜென் காதல் -2




இனி
உடை உடுத்தும் போது
என்னை நினைத்துக் கொள்.

காகம் கத்தியது
அதற்குத் தெரியாது
உன்னைத் தவிர
எனக்கு வேறு
சொந்தம் இல்லையென்று.

உன் காலடித்தளத்தில்
தாமரை பூக்கக்
கண்டிருக்கிறேன்.

காதல் சந்திப்பை
கடந்து சென்றுவிட்டது
நாம் பயணிக்கும் ரயில்
சந்திப்பில் இறங்கியவர்களை
இனி எப்போது சந்திப்போம்.

குடை கொண்டு
வந்தால் கூட
எல்லை மீற
சமயம் பார்க்கிறது
மழை.

தாழிடப்பட்ட
கதவின் உள்ளே
நானும்
அவள் நினைவுகளும்.

அவிழ்ந்த கூந்தலில்
அவளைப் பார்க்கையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
மனதில் சிறகடிக்கும்.

வருடங்கள் விரைந்தோடுகிறது
கனவில் முத்தமிட்டு
மறைந்து போனவள்
இனி எப்போது வருவாள்.

அந்தியில் ஆயத்தமானேன்
என்னவளை வரைவதற்கு
விடியலுக்குள் ஓவியம்
உயிர் பெற்றுவிடுமா.

காதலிக்கும் போது
குளத்துநீர் தெளிவாயிருந்தது
கல்யாணத்திற்கு பிறகு
களையும்பூண்டும்
மிகுந்துவிட்டது.

தலையை நீட்டாதே
பாழும் கிணற்றிலிருந்து
யாரேனும்
பார்த்துவிடுவார்கள்
உன்னை.

உனக்காக
நதிக்கரையில் காத்திருந்தேன்
தோன்றிய கணமே
மறைந்துவிடுகின்றன
நீர்க்குமிழிகள்.



திங்கள், 13 ஜனவரி, 2014

ஜென் காதல் - 1

உன் நினைவுகளோடு
உறங்குவது
உன் நினைவுகளோடு
எழுவது
இதைத் தவிர உருப்படியான
ஒன்றும்
செய்வதில்லை நான்.


அனுதினமும்
தென்றல் வரும் திசையை
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தால்
ஏன் விழிகள் சிவக்காது.


காதலில்
விழுந்த பிற்பாடுதான்
இயற்கை எழிலை
ரசிக்க முடிகிறது.


நீ பெயர் சொல்லி
அழைத்தால்
கல்லறையில்
உறங்கிக் கொண்டிருந்தாலும்
உயிர்த்தெழுந்து ஓடிவருவேன்.


அப்போது நான் கொடுத்த
ரோஜாவை மறுதலித்த நீ
இப்போது வருடந்தோறும் வந்து
என் கல்லறைக்கு
மலர் வளையம் வைக்கிறாய்.


கொஞ்சம் பொறு
சுயம்வரத்தில் சிவதனுசை
ஒடிக்கிறேன்
ஊரார் வியக்கும் வண்ணம்
உன்னை கரம் பிடிக்கிறேன்.


விழிகளால்
கோலம் போடுவாய்
தேவாலயத்தில்
மெழுகுவர்த்தி ஏந்துவாய்
என்னைப் பார்க்க
கூந்தலில் பூச்சூடுவாய்
கடலுக்கு ஏங்கும்
நதியைப் போல்
எனை நாடுவாய்.


காதல் நதியில்
நீந்துவதற்கு
கற்றுத்தர தேவையில்லை
கார்முகிலைப் பார்த்துச்
சொல்லிவிடலாம்
மழை வருமென்று.


காதல் பிசாசு
என்னுள் புகுந்துகொண்டது
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உதிரம் உறிஞ்ச துடிக்கிறது.


உன் அழகு முகத்தை
மறைக்கும் முடிகளை
என்ன சொல்லி
சபிப்பேன்.


தோட்டத்து பூக்களை
எல்லாம் விட்டுவிட்டு
உன் இதழ்களைத் தேடி
வருகிறது இந்த
வண்ணத்துப்பூச்சி.